
டிட்வா சூறாவளி – 33 பில்லியன் ரூபாய் சேதம்
நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக உற்பத்தித்துறைக்கு சுமார் 33.96 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்பு தொடர்பான முதற்கட்ட மதிப்பீட்டின்படி, அதிகப்படியான தாக்கம் மூலப்பொருட்கள் மற்றும் கையிருப்புகளுக்கே ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
அதன் மதிப்பு 10.2 பில்லியன் ரூபா எனவும் வருமான இழப்பு மற்றும் இயந்திர சேதங்களும் கணிசமான அளவில் காணப்படுவதாகவும் கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தொழிற்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இயந்திரங்கள் செயலிழந்தமை, உற்பத்தி செயல்முறை தடைபட்டமை மற்றும் விநியோகச் சங்கிலி முறிந்தமை ஆகியன பாரிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்ட கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக கைத்தொழில் அபிவிருத்தி அனுசரணைத் திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் கைத்தொழில் அமைச்சு கூறியுள்ளது.
