
கொழும்பில் மூன்று நாள் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் ஆரம்பம்
சுகாதார அமைச்சின் (MOH) தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) கொழும்பு மாநகரசபைப் பகுதிகளில் இன்று (24) தொடங்கி மூன்று நாள் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை இலக்கு வைத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவுவதைத் தடுக்கும் பிரச்சாரத்தில் பொது சுகாதார ஆய்வாளர்கள், சமூக காவல் பிரிவுகள் மற்றும் பிற குழுக்கள் அடங்கிய குழுக்கள் தீவிரமாக ஈடுபடும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் இயக்குநர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை கொழும்பு மாநகர சபைப் பகுதிக்குள் 889 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் மொத்தம் 12,165 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பைத் தவிர, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் டெங்கு பரவல்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டெங்கு தடுப்பு முயற்சிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் சமூக ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
