இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு

இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ இலங்கை மீனவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி இந்திய கடற்படையினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இலங்கை மீனவர்கள் சிலர் கரைக்கு திரும்பிய நிலையில் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச மக்களினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )