
விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘கெஹல்பத்தர பத்மே’ உடனான தொடர்புகள் குறித்து வாக்குமூலம் அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்றப் புலனாய்வு திணைகளத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார்.
முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், பிறிதொரு திகதியை கோரியிருந்தார். இதன்படி, இன்று அவர் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், நாமல் ராஜபக்சவின் தாயாருமான ஷிரந்தி ராஜபக்சவும், ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இருந்து வெளியேறினார்.
சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
