
அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஜனாதிபதி உத்தரவு
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் அணுசக்தி விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு மற்றும் சாத்தியமான இராணுவத் தாக்குதல்களைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் துருக்கியில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கனவே, ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போர் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி நகர்ந்துள்ள நிலையில், அமெரிக்கா தாக்கினால் அது பிராந்தியப் போராக மாறும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதனிடையே, உள்நாட்டில் ஏற்பட்ட போராட்டங்களில் சுமார் 35,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.
போராட்ட ஒடுக்குமுறை காரணமாக ஈரானின் பாதுகாப்புப் படையை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையில், பதிலுக்கு ஐரோப்பிய இராணுவங்களைப் பயங்கரவாதக் குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
