
கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை!
பாதுகாப்பு நோக்கங்களுக்காக கொழும்பு முழுவதும் நிறுவப்பட்ட சிசிடிவி கெமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சமீபத்திய தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி காணொளி கண்காணிப்புக்காகவும், போக்குவரத்து சட்ட மீறல்களைக் கண்டறியவும், வாகன இயக்கத்தை நிர்வகிக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கொழும்பில் 33 முக்கிய இடங்களில் 108 கெமராக்கள் நிறுவப்பட்டன.
எனினும் அவற்றில் 23 இடங்களில் 37 கெமராக்காள் செயற்பட்டவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த அமைப்பை, காலாவதியான தொழில்நுட்பம் காரணமாக இனி சரிசெய்ய முடியாது என்று கணக்கியல் அதிகாரி தணிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் முழு கெமரா வலையமைப்பையும் நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் செலவு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் 2014 ஆம் ஆண்டில் அதற்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், சிசிடிவி அமைப்பு விண்டோஸ் எக்ஸ்பி இயக்க முறைமையில் தொடர்ந்து இயங்குகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலாவதியான மென்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவது செயல்பாட்டு சிக்கல்களையும் அதிகரித்த பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனிடையே, கணினி இயக்க முறைமையை தாமதமின்றி நவீன தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் என்று தணிக்கை அறிக்கை செய்தது.
தற்போது பொலிஸார் சிசிடிவி கெமராக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து குற்றங்களைக் கண்காணித்து வருகின்றனர்.
2024ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் கொழும்பில் பிடிக்கப்படும் விதிமீறல்கள், சிசிடிவி பிரிவு மூலம் செயல்படுத்தப்பட்டு, அபராத பற்றுச்சீட்டு மற்றும் காட்சிகள் வாகன உரிமையாளருக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
