
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு
அமெரிக்க சிறப்பு தூதுவர் குழுவுடன் இடம்பெற்ற ஐந்து மணி பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட தூதர்களுக்கும் இடையேயான சிறப்பு சந்திப்பு மொஸ்கோவில் இடம்பெற்றிருந்தது.
நள்ளிரவையும் தாண்டி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி ஒப்பந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், சிறப்பு தூதுவர் குழுவொன்றை நியமித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்தம் அற்றம் அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
இதன் ஒருபகுதியாகவே ரஷ்ய ஜனாதிபதியுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் குழு நேற்று இரவு சந்தித்துப் பேசியிருந்தது. நள்ளிரவையும் தாண்டி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த போச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என புடினின் உயர் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மேலும், பல செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் சில திட்டங்களுக்கு புடின் எதிர்மறையாக பதிலளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு விளக்கமளிக்க சிறப்பு தூதுவர் குழு மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்றதாகவும் உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புடினுக்கும் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு தற்போது திட்டமிடப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் யூரி உஷாகோவ் மேலும் தெரிவித்துள்ளார்.
