நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

நாடாளுமன்ற வளாகம் மற்றும் அக்குரேகொட பகுதியில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கான போர்க்கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கான ஒடுபாதையை திறப்பதற்காக, பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலத்தின் தற்போதைய ஒரு கடல் மைல் சுற்றளவைக் குறைப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அளவை பாதியாகக் குறைக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால், பயண நேரத்தைக் குறைத்து தனியார் ஜெட் விமானங்களை ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் எளிதாக தரையிறக்க அனுமதிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இது மட்டும் போதாது என்றும், இரவு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு கருவி தரையிறங்கும் முறையைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இவை போர்க்காலத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள். இப்போது, ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அவற்றைக் குறைக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தின் மீது பறக்கத் தடை வலயத்தின் கட்டுப்பாடுகளை நீக்கி ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் கொடிதுவக்கு இவ்வாறு கூறினார்.
பறக்கத் தடை வலயத்தின் அளவைக் குறைப்பது தனியார் ஜெட் விமானங்களை விமான நிலையத்தில் தரையிறங்க ஊக்குவிக்கும் என்று ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
