உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்தது – இலங்கை மக்கள் குறித்து நியூசிலாந்து பெண்ணின் நெகிழ்ச்சியான பதிவு

தனது ஒரு மாத கால தனியான சுற்றுலாப் பயணத்தின் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த நம்பமுடியாத இடமாக இலங்கையை விபரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பெண்கள் பயமின்றி எங்கும் பயணிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நியூசிலாந்தை சேர்ந்த மோலி என்ற பெண் சுற்றுலாப் பயணியிடம் உள்நாட்டவர் ஒருவர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியிருந்த நிலையில், சந்தேகநபர் விரைவாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிறைஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி, உள்ளூர் பொலிஸாரின் விரைவான நடவடிக்கையில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
தனது இன்டாகிராமில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் தன்னை குறைகூறியமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சம்பவம் ஒரு நாட்டையோ அல்லது தனி பெண் பயணத்தையோ வரையறுக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.
“அந்த காணொளி இவ்வளவு வைரலாகும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு தனிநபரின் நடத்தையை கொண்டு இலங்கை மற்றும் அங்குள்ள மக்களை மதிப்பிட அனுமதிக்க வேண்டாம் என்றும் மோலி வலியுறுத்தினார்.
தனது ஒரு மாத பயணத்தில் பாதுகாப்பாக உணர்ந்த “நம்பமுடியாத இடம்” என்றும் அவர் விவரித்தார். பெண்கள் பயமின்றி எங்கும் பயணிக்க முடியும் என்றும், தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது ஆதரவாளர்களுக்கும் இலங்கை சுற்றுலா துறை பொலிஸாருக்கும் உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
