இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் – ஆய்வில் தகவல்

இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ஐந்து பேரும் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் 100,000 மக்கள்தொகைக்கு 15 பேர் என காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் சராசரி தற்கொலை விகிதமான 100,000 மக்கள்தொகைக்கு 10.5 ஐ விட இலங்கையில் ஆண்களின் தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டஉலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, தற்கொலை விகிதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.
வயதான ஆண்களிடையே (55+ வயது: 100,000 க்கு 65) அதிக விகிதம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்களிடையே, இது முக்கியமாக இளம் பெண்களில் (17-25 வயது: 100,000 க்கு 10) ஆக பதிவாகியுள்ளது.
தற்கொலை இறப்புகளில் அதிக விகிதம் தூக்கில் தொங்குவதால் (69.9 சதவீதம்), அதைத் தொடர்ந்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திமை (14.0 சதவீதம்), பிற முறைகள் (12.2 சதவீதம்) மற்றும் பூச்சிக்கொல்லி அல்லாத விஷம் (3.9 சதவீதம்) காரணமாக ஏற்பட்டதாகவும் ஆய்வு கூறுகிறது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“உலகளவில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலையால் ஏற்படுகின்றன, மேலும் தற்கொலையால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும், 20க்கும் மேற்பட்ட தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டில், அனைத்து வயதினரையும் (அல்லது 100,000 மக்கள்தொகையில் 9 பேர்) உள்ளடக்கிய 703,000 பேர் உலகளவில் தற்கொலையால் தங்கள் உயிர்களை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தற்கொலைகளிலும் 77 சதவீதம் உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்ந்தன.
2019 ஆம் ஆண்டில், 15–29 வயதுடையவர்களிடையே மரணத்திற்கு தற்கொலை நான்காவது முக்கிய காரணமாகும், மேலும் இது அனைத்து இறப்புகளிலும் எட்டு சதவீதமாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
