இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிக்கின்றனர்

இலங்கையில், 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளில் மலம் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் படி நாட்டின் 6,111,315 குடும்ப அலகுகளில் 0.2 சதவீதம் அதாவது, மொத்தம் 13,326 குடும்பங்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து வாழ்கின்றன என்பதைக் காட்டுகிறது.
92.2 சதவீத வீடுகளில் தனியாக கழிப்பறைகள் உள்ளன என்றும், 5.8 சதவீதம் மற்ற குடும்பங்களுடன் கழிப்பறை வசதிகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 0.2 சதவீதம் பேர் பொது கழிப்பறைகளை நம்பியுள்ளனர், மேலும் 0.2 சதவீதம் பேர் திறந்தவெளிகளைப் பயன்படுத்துகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பதிவாகியுள்ளன. 4518 குடும்பங்கள் இவ்வாறு பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொழும்பு மாவட்டத்தின் 207 குடும்பங்கள் எந்த கழிப்பறைகளையும் பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நுவரெலியா மாவட்டம் பகிரப்பட்ட கழிப்பறை பயன்பாட்டின் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டுள்ளது. இது பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதார சவால்களை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புறங்களில், சுகாதார வசதிகளை அணுகுவதில் உள்ள இந்த இடைவெளிகள், சுகாதாரம் மற்றும் சுத்தத்திற்கு நீண்டகால ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன என்று பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், கிராமப்புற சுகாதார திட்டங்களை வலுப்படுத்தவும், ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட கழிப்பறைகளை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
