கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்

“நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர்.
எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாததால் நாங்கள் அதைக் குடிக்கவில்லை.
அந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்த நால்வரும் நோய்வாய்ப்பட்டனர்,” என்று நுரைச்சோலை கடல் பகுதியில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்து இரண்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து அங்கிருந்த மற்றொரு மீனவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலையைச் சேர்ந்த 26 வயதுடைய துஷார சம்பத் மற்றும் முத்துசாமி விஷ்வா ஆகிய இருவர், போத்தலில் இருந்த திரவத்தை குடித்தமையால் உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள நிலந்த சாமர மற்றும் மாரிமுத்து கோபால் ஆகியோர் புத்தளம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நுரைச்சோலை கடற்கரையில் உள்ள ஒரு மீன்பிடி முகாமில் எட்டு மீனவர்கள் மீன்களை உலர்த்திக் கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் (28) மதியம் கடலில் மிதந்து வந்த போத்தலை கண்டெடுத்துள்ளனர்.
அதை எடுத்த இளைஞன், மற்ற மூவருடன் சேர்ந்து போத்தலில் இருப்பது மதுபானம் என தவறாக நினைத்து குடித்துள்ளனர்.
இந்தப் பொருளை உட்கொண்ட ஒரு இளைஞன் நேற்று முன்தினம் மாலை கடுமையாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
நேற்று காலை மீன்பிடி முகாமின் உரிமையாளர் அங்கு வந்தபோது, மற்றொரு மீனவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதற்கிடையில், இந்த திரவத்தை பருகிய மற்ற இருவரும் பின்னர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்காலையில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழு ஒன்று, கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்ணி குடித்ததில், ஐந்து மீனவர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
