21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி

இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் ஆரம்பமான ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசியான் அமைப்பில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் 03 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று ஆரம்பமான நிலையில் இதன் ஒரு பகுதியாக ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
இதன்போது காணொலி மூலம் இணைந்த இந்திய பிரதமர் மோடி உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் இந்தியா, ஆசியான் நாடுகளில் வசிப்பதாக கூறினார்.
வணிகரீதியாக மட்டுமின்றி கலாச்சார ரீதியாகவும் இணைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு எனவும் 2045 ஆம் ஆண்டுக்கான ஆசியான் அமைப்பின் தொலைநோக்கு திட்டங்கள் நிச்சயமாக நிறைவேறும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
