போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி

அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் அண்டு ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக காசாவில் 65,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் அமைதி ஏற்பட வேண்டும். ரத்தம் தெறிக்கும் வன்முறை முற்று பெற வேண்டும். ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

அதில் உயிரிழந்தவர்களின் உடலையும் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக வொஷிங்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் உலகத்தின் பார்வைக்கு பகிரப்படும்.

இதுவே ஹமாஸுக்கு இறுதி வாய்ப்பு. இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். அது இதுவரை யாரும் காணாத நரகமாக அமையும்.” என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கத் தயார் என்றும், உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

 

Share This