இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு 02 ஆவது நாளாகவும் தொடர்கிறது

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு இன்றும் 02 ஆவது நாளாக தொடர்கிறது.
இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் 700க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் சுமார் 10,000 கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 55 நாட்களுக்குள், கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்த மத்திய அரசாங்கம் உடனடியாக இலங்கையுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதனிடையே, குறித்த கடற்றொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதியன்று தங்கச்சிமடத்தில் போராட்டமும் 15 ஆம் திகதியன்று உணவு தவிர்ப்பு போராட்டமும் , 19 ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டமும் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.