கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டாங்கண்டல் பொதுச் சந்தை வளாகத்திற்கு அருகிலும், மல்லாவி பகுதியில் உள்ள துணுக்காய் பிரதேச சபைக்கு சொந்தமான பொது நூலக வளாகத்திலும் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே எமது நாட்டில் 76 ஆண்டுகளாக இருந்த பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்றியமைத்து 2024 ஆம் ஆண்டில் எங்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியை அளித்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த நம்பிக்கையை பாதுகாப்போம் .
நான் இங்கு வந்தபோது, உங்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதையும், சத்திர சிகிச்சை கூடம் இல்லை என்பதையும், சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்தியசாலைக்கு சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும் அறிந்தேன்.
அவ்வாறே, பிரதேச பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரத்தில் கற்பிக்க ஆசிரியர்கள் இன்மையால், பிள்ளைகள் 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பாடசாலையில் விஞ்ஞான துறையை கற்பதற்கு 50 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் கேள்விப்பட்டேன்.
பொதுப் போக்குவரத்து, பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், மின்சாரம் போன்ற சரியான வசதிகள் இன்மையால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த சூழ்நிலைகளை மாற்ற விரும்புவதால் தான் நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்.
முன்னைய அரசியல் முறைமையின் கீழ், கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிராமத்தை வந்தடையும்போது, 75% தனிநபர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றது, மீதமுள்ளவையே கிராமத்திற்கு வந்துசேர்ந்தன. அந்த முறைமையின் காரணமாக தான், இந்தப் பகுதிகள் இதுவரை அபிவிருத்தியடையவில்லை.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், மோசடி அல்லது ஊழல் இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு குழுவை பிரதேச தலைமைத்துவத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தியில் உள்ள தனது குழு அந்த நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான குழுவென நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.