யாழில் கிணற்றில் இருந்து இருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் கிணறொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று வயதான சிறுவனும் மற்றுமொருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை சேர்ந்த பெருமாள் மகிந்தன் மற்றும் குறித்த நபரின் தங்கை, மனைவி மற்றும் மூன்று வயதான மருமகன் ஆகியோர் துணவி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் தமது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இதன் போது மாமாவான பெருமாள் மகிந்தன் மருமகனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றுள்ளார்.
எனினும், சிறிது நேரம் கழித்து குறித்த வீதியால் வருகை தந்த தங்கை மற்றும் மனைவி வீதியில் நின்ற துவிச்சக்கர வண்டியினை அவதானித்து தமது மூன்று வயது பிள்ளையை தேடியுள்ளனர் .
இந்நிலையில் மூன்று வயது சிறுவன் வயல் கிணற்றில் மிதந்த நிலையில் அவரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் குறித்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுதும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும் குறித்த இடத்திற்கு தொடர்ந்து விரைந்த பொலிஸார் வெளியே கழற்றி வைத்திருந்த பாதணியை அடிப்படையாக கொண்டு கிணற்றில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் பொழுது குறித்த சிறுவனின் தாய் மாமனின் உடலத்தினை கைப்பற்றினர். தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுவனின் தாய் மாமன் வயலை காட்டுவதற்கு சிறுவனை அழைத்து சென்றவேளை சிறுவன் தவறி வீழ்ந்து பின்னர் அவனை காப்பாற்ற குறித்த நபர் கிணற்றில் வீழ்ந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்