
கரந்தெனிய ராஜு மீது 48 கொலை குற்றச்சாட்டுகள்
இந்தியாவில் கைது செய்யப்பட்டு, அண்மையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கரந்தெனிய ராஜு என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர், தென் மாகாணத்தில் நிகழ்ந்த 48 கொலைகள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரபல பாதாள உலகத் தலைவரான கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் என்று கூறப்படும் ராஜு, துபாயிலிருந்து கிரீஸுக்குத் தப்பிச் செல்வதற்காக விசா பெறுவதற்கு இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார்.
அக்குரேகொடவில் அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொலை, கரந்தெனியவில் பிரபல மருத்துவர் ஒருவரின் கொலை, பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஒரு பொது சுகாதார ஆய்வாளரின் கொலை ஆகியவற்றுக்கு கரந்தெனிய ராஜுவே காரணம் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல், கொலைகளுக்காக கூலிக்கு ஆயுதங்களை வழங்குதல், தெற்கில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களில் இவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்திய விரிவான விசாரணையின் விளைவாக கரந்தெனிய ராஜு கைது செய்யப்பட்டார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அக்குரேகொடவில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது, கரந்தெனிய சுத்தாவின் உத்தரவின் பேரில் ராஜுவால் நிகழ்த்தப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்த வழக்கில் தொடர்புடைய பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் ஒருவரிடம் விசாரணை நடத்தியபோது, ராஜு துபாயிலிருந்து கிரீஸுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்ததையும், அவருக்கு இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நபர் விசாக்களை வழங்கத் தயாராகி வந்ததையும் பொலிஸாரால் கண்டறிய முடிந்தது.
ராஜுவுக்கு விசா வழங்குவதற்கு ஈடாக, இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு ஐந்து மில்லியன் ரூபாய் தருவதாகஉறுதியளித்திருந்ததாகவும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
உதவி காவல் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகளால், ராஜுவின் சமீபத்திய வெளிநாட்டு கடவுச்சீட்டு குறித்த தகவல்களையும் பெற முடிந்தது.
அத்துடன் கரந்தெனிய ராஜூவின் அனைத்து தகவல்களும் இந்திய பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, துபாயிலிருந்து இந்தியா வந்த ராஜுவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று இந்தியாவுக்குச் சென்று, ராஜுவைக் கைது செய்து, இலங்கைக்கு அழைத்து வந்தனர்.
குற்றவாளி தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறார். குற்றவாளியை விசாரிப்பதற்காக 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒரவர் தெரிவித்துள்ளார்.
கரண்டெனிய ராஜுவின் முதல் கொலை, மருத்துவரைச் சுட்டுக் கொன்றதுதான். கரண்டெனிய, தனது அண்ணன் சுத்தாவுடன் சேர்ந்து, பண ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையை அரங்கேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் பல கொலைகளை அவர் செய்துள்ளார். அவரது சகோதரர் சுத்தாவின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இந்தக் கொலைகள் அனைத்திலும் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றங்கள் தொடர்பாகத் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
