கீரின்லாந்து மீது கண்வைத்த ட்ரம்ப் – உற்று நோக்கும் உலக நாடுகள்
அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி விமர்சனங்களுக்குள்ளாவதை அண்மைய நாட்களில் அதிகளவில் காணமுடிகின்றது.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் பதவியேற்க உள்ளார்.
ட்ரம்ப் பதவியேற்றதனர் பின்னர் உலகின் பல நாடுகளுக்கு பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவை ஆழமானதாகவும் விரைவானதாகவும் இருக்கும் என்றும் நிபுணர்கள் ஏற்கனவே கூறியிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது கிரீன்லாந்து பேசுபொருளாக மாறியிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அதன் இறையாண்மை எல்லைகளை தாக்குவதற்கு ஏனைய நாடுகளை அனுமதிக்காது என பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்ரம்ப் டேனிஷ் பிரதேசத்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன் இது தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் கூறினார்.
அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான டென்மார்க், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும் குடிமக்களுக்கு சொந்தமானது என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
கிரீன்லாந்தையோ அல்லது பனாமா கால்வாயையோ கையகப்படுத்துவதற்கு இராணுவம் அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவதை நிராகரிப்பீர்களா என செய்தியாளர்கள் மாநாட்டில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பொருளாதார பாதுகாப்பிற்கு எங்களுக்கு அவை தேவை என்று கூறிய ட்ரம்ப் சீன மற்றும் ரஷ்ய கப்பல்களைக் கண்காணிப்பதற்கான
இராணுவ முயற்சிகளுக்கு தீவு முக்கியமானது என்றும் கூறினார்.
கிரீன்லாந்து பனிப்போருக்குப் பின்னர் அமெரிக்க ரேடார் தளத்தின் தாயகமாக இருந்து வருவதுடன் வோஷிங்டனுக்கு நீண்ட காலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கிரீன்லாந்து கிரீன்லாண்டர்களுக்கு சொந்தமானது என டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களால் மட்டுமே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். “நாங்கள் விற்பனைக்கு இல்லை, விற்கப்படவும் மாட்டோம்” என்றும் அவர் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
கீரின்லாந்தை கண்வைத்த ட்ரம்ப்
அரிய கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொண்டமைந்துள்ளது கீரின்லாந்து. அமெரிக்கா, கிரீன்லாந்தில் பிட்டுஃப்ஃபிக் விண்வெளி தளத்தை நிர்வகிக்கிறது.
மேலும் ஆர்டிக் வட்டத்தில் உலகளாவிய சக்திகள் தங்கள் வரம்பை விரிவுபடுத்த முயற்சிப்பதால் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய இடமாகவும் அது பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை ஒரு பாதுகாப்பு உத்தியாகப் பார்க்கிறது. இந்நிலையில்
கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தனது முதல் பதவிக் காலத்தில், கிரீன்லாந்தை வாங்கும் எண்ணத்தை ட்ரம்ப் முன்மொழிந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
அவரது அண்மைய கருத்து தற்போதும் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டு வருவதற்கே அவர் விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
டென்மார்க் பிரதமர் கிரீன்லாந்தை விற்கமாட்டோம் என தெளிவாகக் கூறிய போதிலும் ட்ரம்ப் தனது அறிக்கைகளைத் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் ட்ரம்பின் நிர்வாகத்துடன் பணியாற்ற டென்மார்க் இணக்கம் தெரிவித்திருக்கிறது.
மேலும் கிரீன்லாந்தில் தனது இராணுவ திறனை அதிகரிக்க டென்மார்க் மெதுவாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்யாவின் அத்துமீறல்களுக்கு எதிராக டென்மார்க் அப்பகுதியைப் பாதுகாக்க முடியாவிட்டால், கட்டுப்பாட்டுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் இந்த வேளையில் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். தற்போதும் பல எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற உள்ளதாக கருத்து வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவருடை சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிக வர்த்தக கட்டணங்கள் முதல் கட்டுப்பாடுகளை நீக்குதல், அதிக எண்ணெய் தோண்டுதல் மற்றும் மேற்கத்திய இராணுவ கூட்டணியான வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பில் (நேட்டோ) அமெரிக்காவின் பங்காளிகளுக்கு அதிக கோரிக்கைகள், அரசாங்க நிதி மீதான அழுத்தம், பணவீக்கம் , பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி விகிதங்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.