அவதூறுகளுக்குரிய பதில்களை நுகேகொட பேரணியில் வழங்குவோம் – குற்றாச்சாட்டை மறுத்த நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ‘பி அறிக்கை’ மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும் என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டக்கல்வி தொடர்பில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள கடிதங்கள் தொடர்பில் அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(19) வௌிக்கொணர்ந்தார்.
நாமல் ராஜபக்ஷவின் சட்டக்கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்த விதம், சட்டக்கல்விக்கான சான்றிதழ் மற்றும் சட்டக்கல்லூரிக்கு உட்பிரவேசித்தமை தொடர்பில் இணையத்தளங்களில் பல கடிதங்கள் வெளியானமை குறித்து அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
ஊடகவியலாளர் நிர்மலா கன்னங்கர என்பவரால் இந்த தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாமல் ராஜபக்ஷ கற்றதாகக் கூறப்படும சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டனில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2009 செப்டம்பர் 15ஆம் திகதி, திகதியிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உபவேந்தர் ஜூலை 23 ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உபவேந்தர் இராஜினாமா செய்து 54 நாட்களுக்கு பின்னரே சான்றிதழில் உபவேந்தராக குறித்த நபர் கைச்சாத்திட்டுள்ளதால் இது பாரிய பிரச்சினையாகும் என குறித்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் நிறுவனம் 2009 ஒக்டோபர் 15ஆம் திகதியே இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த நிறுவனத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்ததாக கூறும் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை சட்டக்கல்லூரியில் இணைவதற்காக 2009 செப்டம்பர் 25ஆம் திகதியே கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் இலங்கை சட்டக்கல்லூரியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Bachelor of Laws with Honours class 03 எனும் சான்றிதழே உள்ளதுடன் அதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள சட்ட சபைகளுக்கு பிரவேசிக்க முடியாதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
