நாங்கள் டிரம்பைக் கொல்ல முயற்சிக்கவில்லை – ஈரான் ஜனாதிபதி

நாங்கள் டிரம்பைக் கொல்ல முயற்சிக்கவில்லை – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய தான் ஒருபோதும் சதி செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு, ஜனாதிபதி பிரச்சார பேரணியின் போது டிரம்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியாவில் பேரணி ஒன்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​டிரம்ப் சுடப்பட்டார், மேலும் அவரது காதில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து, டிரம்பை சுட்ட நபரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில், டிரம்பிற்கு சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த படுகொலை சதித்திட்டங்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பதாக விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டது.

டிரம்ப் படுகொலை சதியில் சந்தேக நபர்களாக ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய பல ஈரானியர்களை எஃப்.பி.ஐ. அடையாளம் கண்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெகியான், டிரம்பை படுகொலை செய்யும் சதியில் ஈரானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், டிரம்பை படுகொலை செய்யும் விருப்பம் ஈரானுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் முதல் முறையாகப் பதவி வகித்தபோது, ​​ஈரானிய புரட்சிகர காவல்படையின் துணை இராணுவப் பிரிவாகக் கருதப்படும் குட்ஸ் படையின் தலைவரான ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டார்.

சுலைமானியின் கொலையுடன், ஈரானிய புரட்சிகர காவல்படை டிரம்பைப் பழிவாங்குவதாக சபதம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்ற பிறகு, ஈரானுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்கும் நோக்கில் டிரம்ப் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வார் என்று ஈரான் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This