
டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
வெனிசுலா மீது மேலதிக இராணுவத் தாக்குதல்களை நடத்தும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க செனட் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைக் கொண்ட செனட் சபையில், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஐந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் 52-47 என்ற வாக்குக் கணக்கில் இந்த ‘போர் அதிகாரத் தீர்மானம்’ (War Powers Resolution) வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வார இறுதியில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிசிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகள் குறித்து செனட் உறுப்பினர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
குறிப்பாக, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கம் மற்றும் டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை இராணுவ பலம் கொண்டு இணைக்கப்போவதாக ட்ரம்ப் விடுத்து வரும் எச்சரிக்கைகள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி போர் தொடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், இது சட்டமாவதற்கு அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட வேண்டும். ஆனால், ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனை நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், கிரீன்லாந்து மீது ட்ரம்ப் படையெடுப்பதைத் தடுக்க மற்றுமொரு தீர்மானத்தைக் கொண்டுவர ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
“ட்ரம்ப் தனது விருப்பத்திற்கு ஏற்ப மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதைத் தடுக்க வேண்டும்” என்று செனட்டர் ரூபன் காலேகோ தெரிவித்துள்ளார்.
எனினும், ட்ரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “அதிபர் தான் தலைமைத் தளபதி, அவர் இராணுவத்தைப் பயன்படுத்த முழு அதிகாரம் உள்ளது” என ட்ரம்ப்பிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்
