
சீரற்ற வானிலை – 22 பேர் உயிரிழப்பு, பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை நிலவரப்படி பதுளை மாவட்டத்தில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 11 என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் இருந்து ஏழு பேர் காணாமல் போனதாகவும், கண்டி மாவட்டத்தின் பத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர பகுதிகளில் இருந்து நான்கு பேர் காணாமல் போனதாகவும் பதிவாகியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று (27) காலை 6.00 மணி நிலவரப்படி, மோசமான வானிலை காரணமாக மூன்று வீடுகள் முழுமையாகவும், 381 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மையம் மேலும் தெரிவிக்கிறது.
