பைடன் மற்றும் ஹாரிஸை பழிவாங்கும் ட்ரம்ப் – பாதுகாப்பு அனுமதிகள் இரத்து

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அரசியல் எதிரிகள் சிலருக்கான பாதுகாப்பு அனுமதிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.
தமது நிர்வாகத் துறைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் ட்ரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல் எதிரிகளை இலக்குவைத்து பழிவாங்கும் செயலின் ஒரு பகுதியாக ட்ரம்பின் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
பைடன் மற்றும் பிற முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பாரம்பரியமாக தங்கள் பாதுகாப்பு அனுமதியை மரியாதை நிமித்தமாக தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
பைடன் மற்றும் கமலா ஹாரிஸைத் தவிர, அரசு ரகசியங்களைத் தெரிந்துக்கொள்ள அவர்களின் அங்கீகாரம் பறிக்கப்பட்ட
பெயர்களின் பட்டியலில் பைடனின் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் அடங்குகின்றனர்.
முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனும் பட்டியலில் உள்ளார்.
2021 ஆம் ஆண்டில், அப்போது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ட்ரம்பிற்கான பாதுகாப்பு அனுமதியை பைடன் ரத்து செய்தார்.
ட்ரம்ப் தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலத்திற்கு இடையிலான காலகட்டத்தில், தனது மார்-எ-லாகோ ரிசார்ட்டில்
இரகசிய வெள்ளை மாளிகை ஆவணங்களை சேமித்து வைத்து பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் விசாரணை முடிவுக்கு வந்தது.