சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது

யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனையடுத்து, தினம் பருத்தித்துறை நகரபிதா நேரில் சென்று பரிசோதித்து, குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.
எனினும், ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கிய நிலையில், நகரபிதா வின்சன் டி. டக்ளஸ், பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்தியப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவுடன் நாட்டிற்குள் வந்திருப்பது தெரியவந்தது.
இதன்பின்னர் குறித்த இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.