பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்திர விலை திருத்தத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்கான சிபெட்கோ எரிபொருள் விலையில் நேற்று (31) நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன் 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியன ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.