பட்டங்கள் படும் பாடு
“மன்னர்க்குத்தன்தேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” பெரும் செல்வந்தனாக விளங்கும் மன்னனை விடவும் நிறையக் கற்ற கல்வியாளன் அதிகம் போற்றப்படுகிறான். மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டும்தான் மதிப்பு. ஆனால் கற்றவர்க்கோ சென்ற இடத்திலெல்லாம் மதிப்பு என்பது ஔவையின் மூதுரை.
கல்வித் தகுதி தான் ஒருவனை உயர்த்தி நிற்க வைக்கிறது. அதுதான் நாட்டிற்கும், வீட்டிற்கும் ஒரு நல்ல பிரஜையை உருவாக்குகிறது.
அதனால்தான் பெற்றோர்கள் எந்தளவு துயரத்திலும் பிள்ளைகளை கற்றலில் சிறந்த பட்டதாரிகளாக்க பாடுபடுகின்றனர்.
இந்தக் கல்வித் தகுதி என்பது அந்தக் கல்வியை முறையாக கற்றுத் தேர்ந்த ஒருவருக்கு மட்டுமே உரிய ஒரு பாதுகாப்புக் கவசம் ஆகும்.
அதனை தவறான வழிகளில் பயன்படுத்துபவர்கள் பல பேர் உள்ளனர். தத்தமது நற்பெயருக்காகவும், தொழில்வாய்ப்புகளுக்காகவும் கல்வித் தகைமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், எதிர்கால சந்ததிக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் பலர் தனது கல்வித் தகைமைகைளில் பல குழப்பங்களை செய்துள்ளமை முறையற்ற ஒரு விடயமாகும்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பான விமர்சனங்கள் குறித்த சில தினங்களாகவே சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
அரச சபை என அடையாளப்படுத்தப்படும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பதவிவழி அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு.
பொதுவாக அரசியல்வாதிகளாக தெரிவுசெய்யப்படுபவர்கள் இந்த அளவுக்கு கல்வித் தகைமையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது எங்கும் எழுதப்பட்ட நியதியாக இல்லை.
அரசியல்வாதிகளுக்கு கல்வித் தகைமையிருந்தால் அது வரவேற்கத்தக்கது.
இலங்கை அரசியலில் ஜனாதிபதி வரலாற்றில் கல்வியில் தேர்ந்தவர்களாக ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கூறலாம்.
ஏனையவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இல்லாவிட்டாலும் சிறந்த தெளிவும், அரசியல் ஞானம் பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர்.
எனவே, அரசியலில் ஈடுபட கல்வித் தகைமை என்பது அத்தியாவசியம் கிடையாது எனினும் போலியான கல்வித் தகைமைகளை முன்வைப்பது என்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
முதலில் கூறியது போல நாடாளுமன்றத்தில் முதலாவது அதிகாரம் ஜனாதிபதிக்கும், இரண்டாவது அதிகாரம் பிரதமருக்கும், மூன்றாவது பதவிவழி அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு.
அத்தகைய மதிக்கத்தக்க கதிரையில் அமர்ந்துக்கொண்டு தனது கல்வித் தகைமைகளை போலியாகக் கூறியிருப்பது தலைகுனிய வேண்டிய ஒரு செயலாகும்.
அதுமாத்திரமன்றி, கல்வித் தகைமை போலியானது என சர்ச்சைகள் ஆரம்பித்தவுடன் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அவரது கல்வித் தகைமைகள் நீக்கப்பட்டமை தற்போது மேலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு தீர்வாக சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலக வேண்டும் என பலரும் அழுத்தம் வழங்கி வரும் நிலையில் சமூக ஊடக ஆர்வலர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தின் குறைகளை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளும், பழைய அரசியல் தலைமைகளும் இந்த விடயத்தில் குளிர் காய ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது கல்வித் தகைமை தொடர்பில் எழுந்துள்ள கேள்விகளுக்கு கூடிய விரைவில் பதிலளிப்பேன் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.
சபாநாயகரின் பதில் எதுவாக இருந்தாலும் அநுர அரசாங்கம் அதற்கு சரியான சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம், அது பதவி விலகலோ , பகிரங்க மன்னிப்போ எதுவாக இருந்தாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் அதனை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அதுவே மறுமலர்ச்சி அரசாங்கத்திற்கும் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் நிரூபனமாக அமையும்.
எனினும், இந்த சர்ச்சையை தமது அரசியல் இலாபங்களுக்காக பல அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
இதேவேளை, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த விடயத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
இதனை அரசியலாக்குவது சிறந்தது அல்ல. சபாநாயகரின் கல்வித் தகைமைகள் போலியாக இருந்தாலும் அதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும்.
அதைத்தவிர, இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அதில் குளிர்காயும் செயற்பாடுகளை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உண்மையிலேயே, இதனை தட்டிக்கேட்கும் பழைய அரசியல்வாதிகள் கடந்த நாடாளுமன்றங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஏன் இதுவரையில் வாய்திறக்கவில்லை.
கல்வித்தகைமைகளை மறைப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது எனின், சபாநாயகரின் கதிரையை உடைப்பது தவறு என எந்தக் கட்சி சட்டம் உரைத்தது?
ஆக, கல்வித் தகைமையை சர்ச்சைக்குள்ளாக்கும் பழைய அரசியல் தலைமைகள் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும்.
ஏனையவரின் அரசியல் சிக்கல்களை சுய அரசியல் இலாபங்களுக்காக அரசியலாக்க வேண்டாம் என்பது கோரிக்கை!
“ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்”