எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவது போல், எரிபொருள் விலைகள் நாளாந்தம் மாறும் ஒரு முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள ஊடகமொன்றில் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

எங்களுடைய நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை என சிலர் நினைக்கின்றனர்.

என்னை பொறுத்த வரையில் இரு தரப்பிலும் பிரச்சினைகள் உள்ளன.

பெரும்பாலான நாடுகளில் நாளாந்தம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இலங்கையிலும் அவ்வாறான ஒரு வழிமுறை கொண்டு வரப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக அண்மையில் நாட்டில் ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டது.

எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடியைக் குறைப்பதற்கு எதிராக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு
வெளியிட்டிருந்தனர்.

இதன் காரணமாக எரிபொருன் விநியோகஸ்தர்கள் சங்கம் கடந்த இரண்டு நாட்களுக்கு எரிபொருளை ஆர்டர் செய்வதை நிறுத்தியிருந்தது.

எனினும், கடந்த திங்கட்கிழமை இரவு நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியது.

இந்நிலையில், அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரணைக்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இரண்டு அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share This