இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவில் முழு உலகமும் கண்டது – மோடி

இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவில் முழு உலகமும் கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மகா கும்பமேளா தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மகா கும்பமேளாவில் ஒரு தேசிய விழிப்புணர்வை நாங்கள் கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும்.
மகா கும்ப மேளாவில் சுமார் 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரான்சின் மக்கள்தொகையை விட இது சுமார் 10 மடங்கு. மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு வழிவகுத்த நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
மகா கும்பமேளாவின் வெற்றி, எண்ணற்றோரின் பங்களிப்புகளின் விளைவாகும். இந்தியா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
கடந்த ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற பிரதிஷ்டை விழாவின் போது, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தயாராகி வருகிறது என்பதற்கான ஒரு பார்வையை நாங்கள் பெற்றோம். மேலும் ஒரு வருடம் கழித்து இந்த மகா கும்பமேளாவின் ஏற்பாடு நம்மையும் தேசத்தின் கனவையும் பலப்படுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.