முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒன்பது வாகனங்களைப்
பயன்படுத்தியுள்ளதுடன் எரிபொருளுக்காக 33 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
அதேபோன்று கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் எரிபொருளுக்காக 13 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
அங்கஜன் இராமநாதன் 2024 ஆண்டில் 04 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் எரிபொருளுக்காக 07 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.