
டி20 உலகக் கிண்ணம் – ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக, முக்கிய அரச மற்றும் விளையாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 2026 சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரை இந்தியாவோடு இணைந்து இலங்கையும் நடத்தவுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் பிரதிநிதிகள் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான தளவாட, ஒழுங்குமுறை மற்றும் உள்கட்டமைப்பு தயாரிப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தப் போட்டி பெப்ரவரி ஏழாம் திகதி முதல் மார்ச் எட்டாம் திகதிவரை நடைபெற உள்ளது, இதன்படி கொழும்பு மற்றும் பல்லேகலே ஆகிய மைதானங்களில் சுமார் 20 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் புதிய வருவாய் வழிகளை உருவாக்குவதற்கும் உள்ள வாய்ப்புகள் உட்பட, நிகழ்வின் பொருளாதார தாக்கம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா, கல்வி அமைச்சின் விளையாட்டு இயக்குநர் லெப்டினன்ட் கேணல் அனுர அபேவிக்ரம, ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர் ரஸ்ஸல் அபோன்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் மற்றும் ஆயுதப்படைகளின் மூத்த பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
