போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்

போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியமாகும்.

விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக்கான மைதான வசதிகள் பாரிய அளவில் இல்லை.  இதனால் மழை காலத்தில் கடும் சிரமங்கள் ஏற்படுவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமான ஒன்று எனவும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற வியாஸ்காந் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

இங்குள்ள வீரர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் உதவிகள் வீரர்களுக்கு கிடைப்பதில்லை.

இதற்கு முடிவு கட்ட  சிறப்பான வசதிகள் கொண்ட  உள்ளக விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டு துறை அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This