
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பது, எதிரணிகளால் எப்படியான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன பற்றி ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு பாதிப்பும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
அதனால் கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த அனுபவமுள்ள தலைவர் என்றவகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, இந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் உடனடி நிவாரணங்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில் 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களை மீள இயல்பு நிலைக்கு கொண்டுவர எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆராயவே இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
