பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலால் இந்தியர்கள் அறுவர் பலி

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் இந்திய குடிமக்கள் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன.
மேலும் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின்
09 முகாம்களை இலக்குவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.