சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.