அரிசி – மற்றொரு போராட்டத்தின் ஆரம்பமா?

அரிசி – மற்றொரு போராட்டத்தின் ஆரம்பமா?

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அரிசி மாபியா காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

எதிர்வரும் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் தொடரும் பண்டிகைக் காலம் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை நுகர ஆரம்பித்து விட்டனர். எனினும், தற்போது நாட்டில் அரிசி , தேங்காய் போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பாரதூரமான சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

அதிலும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கியுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் நாட்டு அரிசி , சிவப்பு பச்சை அரிசி போன்ற மக்கள் அதிகளவில் நுகரும் அரிசி வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வர்த்தமானியை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் ஆராய விசேட சுற்றிவளைப்புகளை நுகர்வோர் அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது.

குறித்த சுற்றிவளைப்புகளின் போது அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் , அரிசி கையிருப்பை மறைத்து வைத்திருப்பவர்கள் என பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் புதிய அரசாங்கம் வழங்கிய தீர்வுகள் நிச்சயமாக பாராட்டத்தக்கவை. அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அரிசி கையிருப்புகள் சரியான முறையில் கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறிவிடப்படும் வரியை குறைக்குமாறு அல்லது அரிசி விலையை அதிகரிக்குமாறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் அரிசி இறக்குமதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் அரிசி கையிருப்பு இல்லை என உருவான நெருக்கடிக்கு தீர்வாகவே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்ந்தும் அதிக வரி காரணமாக அரிசியை இறக்குமதி செய்வதிலும் தற்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி மறுசீரமைக்கப்பட வேண்டும் என அரிசி வர்த்தகர்கள் கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் அரிசி இறக்குமதியும் நிறுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் வர்த்தகர்களோ, அரசாங்கமோ அல்ல பொதுமக்கள் மாத்திரமே.

எதிர்வரும் நாட்களில் சந்தையில் அரிசியை நுகர முடியாமல் போவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். நேற்று தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சம்பா மற்றும் வெள்ளை பச்சை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரு நாட்களுக்கு கூடுதலான அரிசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அரிசி வர்த்தகர்கள், ஆலை உரிமையாளர்கள் இந்த இறக்குமதியுடன் அதிகளவு ஈடுபாட்டுடன் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

தேர்தல் மேடைகளில் அரிசி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கோரிக்கைகளை முன்வைத்தே காரியங்களை நிறைவேற்றி வருகிறார். எனினும், அரசாங்கமாக வர்த்தகர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி அறவிடுவது சாதாரணமாக இருந்தாலும் , அந்த வரி அதிகம் என வர்த்தகர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு செவி சாய்த்து குறைத்தார்களாக இருந்தால் நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வு கிட்டும்.

வரி அறவிடுவது என்பது நாட்டுக்கு வருவாயை கொண்டு வரும் ஒரு விடயமாக இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழலில் வர்த்தகர்களிகன் கோரிக்கையை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும். அரிசி இறக்குமதியாளர்களுக்கும் வரி செலவு போக அரிசி விற்பனையால் கிடைக்கப்படும் தொகை குறைவாகவும் அதில் எதுவித இலாபமும் இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், மக்களுக்காக செயற்படுவதையே தனது முழு நேரக் கொள்கையாக கொண்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை ஏற்று செயற்பட்ட விதம் அனைத்தும் பாராட்டத்தக்க விடயங்கள் ஆகும்.

எனினும், அதே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வர்த்தகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் மேலெழ இருக்கும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும். அவ்வாறு இல்லையெனில், மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு இது வித்திடும் என்பதில் சந்தேகமெதுவுமில்லை.

 

 

‘ஒருவன் நாளிதழின் இன்றைய நாளுக்கான ஆசிரியர் தலையங்கம்’

Share This