ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது!! தேசிய வைத்தியசாலையின் இயக்குநர் அறிவிப்பு

ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது!! தேசிய வைத்தியசாலையின் இயக்குநர் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவரது இரத்தத்திலும் பிற உடல் அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலை ‘வெப்ப பக்கவாதமாக’ இருக்கலாம் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையான நாளில் சுமார் 10 மணி நேரம் கடுமையான வெப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்ததே இந்த நிலைக்குக் காரணம் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு சரியான தண்ணீர் அல்லது உணவு கிடைக்காமல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் வைத்தியர் கூறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி பல சிறப்பு மருத்துவக் குழுக்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

நீரிழப்பு நிலையை முறையாக நிர்வகிக்காவிட்டால், அது சிறுநீரகங்கள், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளைப் பாதித்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஆபத்தைத் தடுக்க அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறையான சிகிச்சை பெற்ற பிறகு, முன்னாள் ஜனாதிபதி சுமார் இரண்டு முதல் மூன்று நாட்களில் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப முடியும் என்று வைத்தியர் ருக்ஷன் பெல்லனா வலியுறுத்தியுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This