நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்

நேபாளத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முன்னாள் பிரதமரின் இல்லத்திற்குத் தீவைக்கப்பட்டமை, மற்றும் முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்த சம்பவமும் மிகுந்த வருத்தத்திற்குரியது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மீதான தாக்குதலும் துயரத்திற்குரிய சம்பவமாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை எரிக்கப்பட்டது நேபாளத்தின் ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் புத்தர் பிறந்த நேபாளம் இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், அத்தகைய நாட்டில் இதுபோன்ற செயல்கள் இடம்பெறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.