வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

வடக்கு கிழக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, 2025 -ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக் கூறினார்.

மீதமுள்ள காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ள அவர், நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பதில் உள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக காணிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )