மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டமான “வரி சக்தி” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் அதிகபட்ச தண்டனை வழங்க தலையிடுவேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மக்கள் செலுத்தும் வரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கு எதிராக செயல்படும் கருப்புப் பொறிமுறையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக” என்ற தொனிப்பொருளின் கீழ் “வரி சக்தி – தேசிய வரி வாரம்” ஆரம்பித்தல் இதற்கு இணைந்த வகையில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் ஸ்தம்பிதமடைந்த ஒரு நாட்டை பொறுப்பேற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வரி பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடாக நாம் தகுதிகாண் காலத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் உடன்படிக்கையை இந்நாட்டின் அவ்வாறான இறுதி வேலைத்திட்டமாக மாற்றுவதன் மூலம் நமக்கே உரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

வரி செலுத்துவதில் மக்களின் அவநம்பிக்கையான மனப்பான்மையை நம்பிக்கையான மனப்பான்மையாக மாற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற புதிய வரிக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரி சக்தி தேசிய வரி வாரம் செயல்படுத்தப்படுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரையான வாரத்தில், வரி செலுத்துதல் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வரிப்பணம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதுடன் மக்களுக்கான நன்மைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

 

CATEGORIES
TAGS
Share This