அரசியல் என்பது மைக்கை கையில் எடுத்து பேசுவது அல்ல – விஜய் புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அண்ணாமலை

அரசியல் என்பது வெறும் மைக்கை கையில் எடுத்து பேசுவது அல்ல என தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் புதுடில்லியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அதேபோன்று பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகிய மூவரையும் சந்தித்திருக்கிறேன். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜகவின் வளர்ச்சி மற்றும் பணிகள் குறித்து கலந்துரையாடினோம்.
2026 ஆம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை, தமிழகத்துக்கு மிக முக்கியமான தேர்தல் என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழகத்தை ஆளும் திமுக அரசு மீது நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.
2026 தேர்தல் தமிழக மக்களின் நலனுக்கான தேர்தலாகப் பார்க்கிறேன். கூட்டணிக்கான நேரம், காலம், அவகாசம் போன்றவற்றிற்கு சுமார் 09 முதல் 10 மாதங்கள் உள்ளன.
பாஜக நலனைவிட முக்கியமானது தமிழக மக்களின் நலன். இவை அனைத்தையும் ஆலோசித்து கூட்டணி தொடர்பில் உரிய நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவார்கள்.