காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம் : டிரம்ப்பின் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு
காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும் எதிா்ப்பு வலுவடைந்துவருகிறது.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரே தீா்வு என்ற இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக டிரம்ப்பின் இந்தக் கருத்து உள்ளதால் அது கடும் விமா்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
கத்தாா்: இது குறித்து செய்தியாளா்களிடம் கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மஜீத் அல்-அன்சாரி கூறியதாவது,
பாலஸ்தீனா்களுக்கு அவா்களின் முழு உரிமைகளும் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை கத்தாா் தொடா்ந்து வலியுறுத்திவருகிறது. அந்தப் பிராந்திய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இரு தேசத் தீா்வை மட்டுமே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.
பிரான்ஸ்: பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இது குறித்து செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘காஸா பகுதியிலிருந்து பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது ஏற்புடையது இல்லை. அது, சா்வதேச சட்டங்களை மிகக் கடுமையாக மீறும் செயல். இருதேசக் கொள்கைத் தீா்வை எட்டுவதற்கு அது மிகப் பெரிய தடைக் கல்லாக இருக்கும்’ என்றாா்.
ஈரான்: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பக்காயீ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘காஸாவை சுத்தப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்துள்ளது, அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஆயுதங்கள், தளவாடங்கள், உளவுத் தகவல்கள், அரசியல், நிதி உதவியுடன் பாலஸ்தீனத்தில் காலனியாதிக்கத்தை நிறுவ நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் ஓா் அங்கமாகும்.
காஸாவில் ஆக்கிரமிப்புவாதிகளால் கடந்த 15 மாதங்களாக நடத்தப்பட்ட இனப் படுகொலைகளால் அந்தப் பகுதியிலிருந்து பாலஸ்தீனா்களை துடைத்தெறிந்துவிட முடியாது. அது அவா்களின் சொந்த மண். அதைத் தக்கவைத்துக்கொள்ள மிகப் பெரிய தியாகத்தை பாலஸ்தீனா்கள் செய்துவருகின்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜொ்மனி: காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற டிரம்ப்பின் பரிந்துரையை ஜொ்மனியும் நிராகரித்துள்ளது. இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்ற ஐரோப்பிய யூனியன், அரபுக் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. அமைப்பின் கருத்துகளையே நாங்களும் பிரதிபலிக்கிறோம். காஸா பகுதியை இஸ்ரேல் நிரந்தரமாக ஆக்கிரமிப்பதை எதிா்க்கிறோம்’ என்றாா்.
காஸாவிலிருந்து தங்களை வெளியேற்றி அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்று டிரம்ப் கூறியதை ஹமாஸ் அமைப்பும் பாலஸ்தீன அரசும் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் நன்றி தெரிவித்துள்ளது.
டிரம்ப்பின் இந்தக் கருத்தால் அவரின் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே அதிா்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, டிரம்ப் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 மாத போருக்குப் பிறகு காஸா பகுதி இடிபாடுகளால் நிறைந்திருப்பதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உள்பட அனைத்தையும் ‘சுத்தம்’ செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டாா்.
அதற்காக, எகிப்து உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனா்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.
இலட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ள ஜோா்தானுக்கு நன்றி கூறிய டிரம்ப், இது போதாது எனவும் இன்னும் அதிக அகதிகளை அந்த நாடு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து பிற நாடுகளில் குடியமா்த்தப்படுவது தற்காலிக ஏற்பாடாவும் இருக்கலாம், அல்லது மிக நீண்ட கால ஏற்பாடாகவும் இருக்கலாம் என்று கூறி, டிரம்ப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாா்.