மீண்டும் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி சிலர் அரிசியின் விலையை உயர்த்தி வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக இந்த வருடம் பெரும் போகத்தில் எதிர்பார்த்த அரிசி அறுவடை கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு நெல் அறுவடை 2.9 மில்லியன் மெற்றிக் தொன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.6 மில்லியன் மெற்றிக் தொன்களாக குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சந்தையில் கீரி சம்பா, சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எவ்வாறாயினும், பண்டிகை காலத்தின் போது நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்குவதில் அரசாங்கம் தலையிடும்.
இதேவேளை, பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இந்த நாட்களில் சந்தையில் முட்டையின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தற்போது ஒரு முட்டை 25 ரூபா தொடக்கம் 30 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில், முட்டை உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதால், முட்டையின் விலையை, 35 ரூபாய் அல்லது அதற்கு மேல் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.