இஷாராவை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பிய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டதையடுத்து
தம்மை யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அழைத்துச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளார்.
பிரதான ஆட்கடத்தல்காரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலரை அவர் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதுமாத்திரமின்றி இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட கம்பஹா பபாவின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பதிவுகளை ஆராயவும் நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும் கெஹெல்பத்தர பத்மேவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நாட்டில் நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், வெடிபொருட்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முன்னெடுத்துச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.