கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இதுவரை ஏழு பேர் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
முன்னதாக துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் காரும் புறக்கோட்டை, ஆர்மர் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
காரில் ஒரு உயிருள்ள தோட்டாவையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு காரைக் கொடுத்த நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தரையில் விழுந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் காரை ஏற்றியிருந்தனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் ஏராளமான கொலைகள் மற்றும் குற்றங்களுக்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, புகுடுகண்ணாவின் குழுவினருக்கும் பழனி ரெமோஷன் குழுவினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
