யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த பணிகள் கடந்த 10 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கையும், நீல நிறப் புத்தகப்பையுடன் மீட்கப்பட்ட சிறுவனின் என்புத் தொகுதி தொடர்பான அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவித்திருந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினுடைய அறிக்கையும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்பின்னர் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டதை நீதவான் ஆனந்தராஜா மன்றில் வெளிப்படுத்தினார்.
மேலும் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை ஊடகவியலாளர்கள் மற்றும் அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் விசேட நிபுணர்கள் மாத்திரமே அகழ்வுப் பணிகளைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதைகுழியில் கண்டெடுக்கப்படும் சான்றுகளை மக்கள் மத்தியில் தவறாகக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காகவே கட்டுப்பாடுகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.