காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் – அமெரிக்க திட்டத்திற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி

காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.
இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் நாளில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் உயிருடன் மற்றும் இறந்தவர்களில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள பணயக்கைதிகளும் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு அதிக நேரம் தேவை என்பதை உணர்ந்த பின்னர், தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிக்க விட்காஃப் முன்மொழிந்ததாக நெதன்யாகுவின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக், ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹசெம் காஸ்ஸெம், காசாவில் முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான இஸ்ரேலின் “வடிவமைப்பை” குழு நிராகரித்ததாகக் கூறினார், ஆனால் விட்காஃப்பின் திட்டத்தை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
ஹமாஸ் ஒப்புக்கொண்டால் விட்காஃப்பின் திட்டம் குறித்து இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தும் என்று நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“ஒப்பந்தத்தின்படி, பேச்சுவார்த்தைகள் பயனற்றவை என்று இஸ்ரேல் உணர்ந்தால், 42வது நாளுக்குப் பிறகு மீண்டும் போரில் ஈடுபடலாம்” என்று நெதன்யாகுவின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாகயும் குற்றம் சாட்டியது. எவ்வாறாயினும், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.