விஜய் உயிருக்கு ஆபத்து? நேரடியாக களத்தில் இறங்கிய சிஆர்பிஎஃப் தலைமை அதிகாரி

விஜய் உயிருக்கு ஆபத்து? நேரடியாக களத்தில் இறங்கிய சிஆர்பிஎஃப் தலைமை அதிகாரி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் தலைமை டிஜிபி மற்றும் கமாண்டன்ட் ஆகியோர் அவரது வீட்டில் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடமும், தமிழக வெற்றிக் கழகத்திடமும் எழுப்பி இருந்தது.

இதனிடையே, தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விஜய்க்கு பாதுகாப்பு வழங்கி வரும் ஓய் பிரிவு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது.

தற்போது, விஜய்க்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா, கரூர் பிரச்சாரக் கூட்டத்தின் போது, விஜய்க்கு எந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, அப்போது, விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உள்துறை அமைச்சகம் எழுப்பி இருந்தது.

இதற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், விஜய்க்கான பாதுகாப்பு போதுமா அல்லது அதிகரிக்கப்பட வேண்டுமா? என்று முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஓய் பிரிவு பாதுகாப்புக்கு பதிலாக ஒய் ப்ளஸ் அல்லது அதற்கு மேலாக இசட் பிரிவு பாதுகாப்பை அதிகரிக்க சிஆர்பிஎஃப் தரப்பிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு சிஆர்பிஎஃப் தலைமை டிஜிபி சஞ்சய் குமார், பெங்களூரு சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் மனோஜ் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 15 நிமிட ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Share This