மோடியின் வருகை தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு

மோடியின் வருகை தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரிடையே இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவர் அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு நடத்தவும், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட, பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற மதிப்பாய்வு தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் இறுதியாக 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைத்தந்தார். இலங்கை ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளைக் கொண்டுள்ளன.

இந்த விஜயம் நாடுகளுக்கு இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும், மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share This