அமெரிக்காவுக்கான பல தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவிப்பு

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக நாளை முதல் அமெரிக்காவுக்கான பல தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.
இதுதவிர, தற்போது தபால் சேவைக்கான சுங்க கட்டணத்திலும் அமெரிக்கா மாற்றம் மேற்கொண்டுள்ளது.
அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பொதிகளுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு தபால்களை எடுத்துச் செல்வதில் கட்டணக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எந்த அளவுக்கு கட்டணங்களை அறிவிடுவது என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக தபால்களை ஏற்க அமெரிக்காவுக்கு விமானங்களை
இயக்கும் விமான நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
இதனையடுத்து ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவைகளை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது.
மேலும் 800 அமெரிக்க டொலர் வரை மதிப்புள்ள பொருட்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருள்களும் அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின்படி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 100 அமெரிக்க டொலர் வரையுள்ள பரிசுப் பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். ஏனை பொருட்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்சல் அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் சுமார் 9,000 ரூபா (100 டாலர்) மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தவிர்த்து, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான அனைத்து வகையான பார்சல்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே பொதிகளை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமம் தொடர்பில் தபால் துறை கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கான முழு சேவைகளையும் விரைவில் மீண்டும் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கான தபால் பொதி சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.